விளையாட்டு

புரோ கபடி லீக்: ஐதராபாத்தில் இன்று தொடங்குகிறது

webteam

புரோ கபடி லீக் தொடர் ஐதராபாத்தில் இன்று தொடங்குகிறது. முதலாவது லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-மும்பை அணிகள் மோதுகின்றன.

புரோ கபடி லீக் தொடர் 2014 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 7-வது புரோ கபடி லீக் போட்டி தொடர், ஐதராபாத்தில் இன்று இரவு தொடங்குகிறது. அடுத்து மும்பை, பாட்னா, ஆமதாபாத், சென்னை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, புனே, ஜெய்ப்பூர், பஞ்ச்குலா, நொய்டா ஆகிய இடங்களில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

இதில், தமிழ் தலைவாஸ் உட்பட 12 அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள், அரை இறுதிக்கு முன்னேறும். மற்ற 2 அணிகள் எலிமினேட்டர் சுற்று மூலம் முடிவு செய்யப்படும். அக்டோபர் 16- ஆம் தேதி அரை இறுதிப்போட்டியும், அக்டோபர் 19 ஆம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது. 

ஐதராபாத்தில் உள்ள கச்சிபவுலி உள் விளையாட்டு அரங்கில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ்-மும்பை அணிகள் மோதுகின்றன. இரவு 8.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் போட்டியில் பெங்களூரு புல்ஸ், பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதுகின்றன. 

இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1.80 கோடியும், இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.1.20 கோடியும் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.