விராட் கோலியின் இடிமுழக்கமான பேட்டிங்கை இளம் வீரர் பிரித்வி ஷா திருடிவிட்டார் என்று விவிஎஸ் லஷ்மண் புகழாரம் சூட்டியுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங் வெற்றி பெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 659 ரன் குவித்தது. தொடக்க வீரரான பிரித்வி ஷா அதிரடியாக விளையாடி 99 பந்துகளில் சதம் விளாசினார். இது அவருக்கு அறிமுக போட்டியாகும். பிரித்வி ஷா 154 பந்துகளில் 134 ரன் குவித்து ஆட்டமிழந்தார். அதேபோல், கேப்டன் விராட் கோலியும் 230 பந்துகளில் 139 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜாவும் சதம் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில், பிரித்வி ஷாவின் பிரமிக்கவைக்கும் செஞ்சூரி விராட் கோலியின் சதத்தை மறைத்துவிட்டது என்று கிண்டலாக பாராட்டியுள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு லஷ்மண் அளித்த பேட்டியில், “விராட் கோலி அடிக்கும் சதம் பேசப்படாமல் இருப்பது அரிதாக நடக்கக் கூடாது. கேப்டன் விராட்டின் அற்புதமான ஆட்டம் இளம் அறிமுக வீரர் பிரித்வியின் ஆட்டத்தால் திருடப்பட்டுவிட்டது. அறிமுக போட்டியில் அவர் அடித்த சதம் பார்ப்பதற்கு அவ்வளவு அற்புதமாக இருந்தது. முதல் தரப் போட்டியில் எந்த மனநிலையில் எப்படி விளையாடினாரோ, அதேபோல் விளையாடியுள்ளார். அவரது இந்த ஆட்டத்தை பார்க்கையில் நீண்ட காலம் அவர் இதனை தொடர்வார் என்பதை காட்டுகிறது” என்று கூறினார்.
அதிரடியாக விளையாடி தனது முதல் சதத்தை பதிவு செய்த ஆல் ரவுண்டர் ஜடேஜாவின் பேட்டிங்கையும் விவிஎஸ் லஷ்மண் வெகுவாக பாராட்டியுள்ளார்.