வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக பிராத்வொயிட் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி கே.எல்.ராகுலும் அறிமுக வீரர் பிருத்வி ஷாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியல் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் கே.எல்.ராகுல் எல்பிடபிள்யூ ஆனார். அவர் ரன் கணக் கைத் தொடங்கும் முன்பே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து பிருத்வியுடன், புஜாரா ஜோடி சேர்ந்தார். இருவரும் வந்த பந்துகளை அடித்து ஆடி வருகின்றனர். 19.5 ஓவர்களில் இந்திய அணி நூறு ரன்களை கடந்தது. பிருத்வி ஷா, ஒரு நாள் போட்டிகளில் ஆடுவது போல அதிரடியாக ஆடி வருகிறார். அவர் தனது 56 வது பந்தில் அரை சதத்தைக் கடந்தார்.
உணவு இடைவேளை வரை, இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. உணவு இடைவேளைக்கு பின்பு மீண்டும் வேகமெடுத்த ப்ரித்வி ஷா 32.2 ஆவது ஓவரின் போது 101 ரன்களை எடுத்து சதமடித்தார். இந்தியா 32.4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்திருந்தது. இதில் புஜாரா 67 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.