விளையாட்டு

முடிகிறது தடை, வருகிறார் பிருத்வி ஷா!

webteam

எட்டு மாத கால தடை முடிந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட வருகிறார் பிருத்வி ஷா.

சையது முஷ்டாக் அலி தொடரில் விளையாடுவதற்காக, பிப்ரவரி மாதம் கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. அதில், தடை செய்யப்பட்ட ஊக்கமூட்டும் தன்மையுடைய இருமல் மருந்தை பிருத்வி ஷா உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது. 

இதுதொடர்பாக ஜூலை 16 ஆம் தேதி அவர் மீது குற்றசாட்டும் முன்  வைக்கப்பட்டது. இதனால், பிருத்வி ஷாவுக்கு மார்ச் 16 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது.

மும்பையைச் சேர்ந்த இளம் வீரரான பிருத்வி ஷா, இந்திய அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வார் என பலர் பாராட்டியுள்ளனர். சர்வதேச போட்டிகளைப் பொறுத்தவரை 2 டெஸ்ட் போட்டியில் விளையாடி 237 ரன்கள்
எடுத்துள்ளார். ஒரு சதமும் அவர் அடித்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கான தடை, 15 ஆம் தேதி முடிவடைவதால், தற்போது நடக்கும் சையது முஷ்டாக் அலி டி-20 தொடருக்கான மும்பை அணியில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

’வரும் 16 ஆம் தேதி முதல் அவருக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்படுகிறது. அதனால், அவரை அணிக்கு தேர்வு செய்ய வாய்ப்பிருகிறது. அவர் உடல் தகுதியுடன் இருக்கிறார். ஆனால், உறுதியாக எதையும் நான் சொல்ல முடியாது’ என்று மும்பை அணியின் தேர்வுக் குழுத் தலைவரும் மும்பை அணியின் முன்னாள் கேப்டனுமான மிலிந்த் ரேகே தெரிவித்துள்ளார்.