விளையாட்டு

அஸ்வினுக்கு பதில் ஜடேஜா சேர்ப்பு: பிரித்வி ஷா அதிரடி அரைசதம்!

rajakannan

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நிதானமாக விளையாடி வருகிறது.

கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல், காயம் காரணமாக விலகியுள்ள இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் இடம்பெற்றுள்ளார்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்‌‌வாலும், பிரித்வி ஷாவும் களமிறங்கினர். மயங்க் அகர்வால் 7 ரன்களில் டிரென்ட் பவுல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த புஜாரா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் இளம் வீரர் பிரித்வி ஷா அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விளாசினார். அவரது ஆட்டம் இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. 

அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த நிலையில், 54 ரன்களில் ஜேமின்ஸன் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார் பிரித்வி ஷா. உணவு இடைவேளைக்கு முன்பு வரை இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்துள்ளது. முதல் போட்டியில் படுதோல்வியடைந்த இந்திய அணி, தொடரை இழக்காமல் இருக்க 2ஆவது டெஸ்ட்டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. புஜாரா 15(49) ரன்களுடனும், கேப்டன் விராட் கோலி 3(14) ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

நியூசிலாந்து மண்ணில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து அரைசதம் அடித்த இரண்டாவது இளம் வீரர் என்ற பெருமையை பிரித்வி ஷா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.