விளையாட்டு

தடைக்கு பின் களமிறங்கிய போட்டியில் பிரித்வி ஷா அசத்தல்..!

webteam

தடைக்கு பின்பு களமிறங்கிய பிரித்வி ஷா தனது முதல் போட்டியிலேயே அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். 

சையது முஷ்டாக் அலி தொடரில் விளையாடுவதற்காக, பிப்ரவரி மாதம் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. அதில், தடை செய்யப்பட்ட ஊக்கமூட்டும் தன்மையுடைய இருமல் மருந்தை பிரித்வி ஷா உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஜூலை 16 ஆம் தேதி அவர் மீது குற்றசாட்டும் முன்  வைக்கப்பட்டது. இதனால், பிரித்வி ஷாவுக்கு மார்ச் 16 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில் தடைக்காலம் முடிந்தவுடன் பிரித்வி ஷா இன்று சையது முஷ்டாக் அலி தொடர் போட்டியில் மும்பை அணி சார்பில் களமிறங்கினார். இந்தப் போட்டியில் மும்பை அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 39 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 63 ரன்கள் எடுத்தார். இவரின் சிறப்பான ஆட்டத்தால் மும்பை அணி 20 ஓவர்களில் 206 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய அசாம் அணி 20 ஓவர்களில் 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. 

கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்ட காலம் முடிந்து வந்தவுடன் தனது முதல் போட்டியிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷாமிகவும் பாராட்டுகளை பெற்று வருகிறார்.