பாராலிம்பிக் பேட்மிண்டனில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பாராலிம்பிக் ஆடவர் பேட்மிண்டனில் தங்கம் வென்ற பிரமோத் பகத் மற்றும் வெண்கலம் வென்ற மனோஜ் சர்காருக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். இந்திய தடகள வீரர்கள் வித்தியாசமான போட்டிகளில் சிறந்து விளங்குவது மகிழ்ச்சியளிப்பதாகவும், வீரர்களிடையேயான தன்னம்பிக்கை மெச்சத்தக்கது எனவும் பிரதமர் பாராட்டினார்.
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தங்கம் வென்ற பிரமோத் பகத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக மேடையில் இந்தியாவின் தேசிய கீதம் ஒலிப்பது இந்தியர்களுக்கும் மிகவும் பெருமிதமான தருணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேபோல் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், தங்கமகன் பிரமோத்துடன் காணொலி வாயிலாக உரையாடி வாழ்த்து தெரிவித்தார். பிரமோத்தின் வெற்றியால் தேசமே பெருமைப்படுவதாகவும் நவீன் பட்நாயக் நெகிழ்ச்சி பொங்க பாராட்டினார்.