விளையாட்டு

ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளராகிறார் ரிக்கி பாண்டிங்

ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளராகிறார் ரிக்கி பாண்டிங்

webteam

வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். வலது கை பேட்ஸ்பேனான இவர், ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரராக இருந்தார். 2003 மற்றும் 2007ம் ஆண்டுக்கான உலக கோப்பையை பாண்டிங் தலைமையின் கீழான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியே கைப்பற்றியது. உலகக் கோப்பை போட்டிகளின் வெற்றியின் நுணுக்கத்தை அறிந்தவர் பாண்டிங் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்துவரும் நிலையில் அவரை வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான துணை பயிற்சியாளராக நியமிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் சிஇஓ கெவின் ராபர்ட்ஸ், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் குறுகியகால பயிற்சியாளராக பணியாற்ற வேண்டுமென்று நான் விரும்பினேன். ரிக்கி பாண்டிங் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பணியாற்றி இருக்கிறார். ஆனால் உலக கோப்பை போட்டிக்காக பணியாற்றுவது அவருக்கு மேலும் சிறப்பானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசியுள்ள ரிக்கி பாண்டிங்,  உலக கோப்பை போட்டிக்கான பயிற்சியாளர்கள் குழுவில் இணைய இருப்பது ஆர்வமாக இருக்கிறது. ஒரு நாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளுக்கான குறுகிய கால பயிற்சியாளராக நான் பணியாற்றியுள்ளேன். ஆனால் உலக கோப்பை போட்டிகளுக்கு பணியாற்றுவது முற்றிலும் புது அனுபவமாக இருக்கும். வரும் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் மற்ற அணிகளுக்கு ஆஸ்திரேலியா சவாலாக இருக்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ரிக்கி பாண்டிங் நியமனம் குறித்து பேசிய தலைமை பயிற்சியாளர் ஜெஸ்டின் லாங்கர், நானும் ரிக்கி பாண்டிங்கும் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி இருக்கிறோம். அவர் நிச்சயம் ஆஸ்திரேலிய அணிக்கு பயனளிப்ப்பார். உலக கோப்பையை வெல்வதற்கான நுணுக்கங்களை அவர் அறிந்தவர். பேட்டிங் பயிற்சியாளராக மட்டுமல்லாமல் உலக கோப்பையை வெல்வதற்கான ஒவ்வொரு நுணுக்கங்களையும் ஆஸ்திரேலிய அணிக்கு அவர் வழங்குவார் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.