விளையாட்டு

தவிக்கும் கோடையில் ஐபிஎல்-க்காக தண்ணீரை வீணாக்குவதா?

தவிக்கும் கோடையில் ஐபிஎல்-க்காக தண்ணீரை வீணாக்குவதா?

webteam

தண்ணீரின்றி தவிக்கும் கோடை காலத்தில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக சுமார் 60 லட்சம் லிட்டர் வீணாக்கப்பட இருப்பதால் போட்டியை வேறு நாட்டில் நடத்த வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் அல்வாரில் உள்ள ஜனதா காலனியை சேர்ந்தவர் சேர்ந்தவர் ஹைதர் அலி. இவர், டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். 

அதில், ‘ஐபிஎல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 7 ஆம் தேதி தொடங்குகிறது. ஒன்பது மாநிலங்களில், 51 இடங்களில் 60 போட்டிகள் நடக்கிறது. இதையொட்டி மைதான பராமரிப்பு, பிட்ச் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக, சுமார் 60 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட இருக்கிறது. தண்ணீரின்றி மக்கள் தவிக்கும் கோடை காலத்தில், இவ்வளவு தண்ணீர் வீணாவதோடு நிலத்தடி நீர்மட்டமும் குறையும். இதனால் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே இந்தப் போட்டியை நம் நாட்டுக்கு வெளியே நடத்த வேண்டும்’ என்று கூறியிருந்தார்.  

இதுகுறித்து விசாரணை நடத்திய பசுமை தீர்ப்பாயம், மத்திய நீர்வளத்துறை அமைச்சகம், இந்திய கிரிக்கெட் வாரியம், போட்டியை நடத்தும் 9 மாநிலங்கள் ஆகியவற்றுக்கு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதன் அடுத்த விசாரணை ஏப்ரல் 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.