விளையாட்டு

வறுமையின் இருளில் ஒலிம்பிக் சாம்பியன்

webteam

விளையாட்டின் உச்சமான ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தவர் பிளாட்டினி மாறன். ஆனால் அவருடைய தற்போதைய நிலையோ வருத்தம் தர வைப்பதாக இருக்கிறது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 140 நாடுகள் பங்கேற்ற சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் சாதித்தவர் ஆட்டிசம் பாதிப்புடைய மாற்றுத்திறனாளி வீரர் பிளாட்டினி. அந்த மகிழ்ச்சியான தருணம் நடந்து இரண்டு வருடங்கள் தாண்டியும் சோகத்தின் நிழல் அவரது குடும்பத்தை விட்டு அகலவில்லை. கொத்து கொத்தாக காலண்டர் ஆணியில் தான் வாங்கிய பதக்கங்கள் தொங்கி கொண்டிருக்க, அவற்றை பாதுகாப்பாக வைக்கக்கூட இடம் இல்லாமல் வறுமையின் இருளில் அமர்ந்துள்ளார் ஒலிம்பிக் சாம்பியன்.

ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டாலே சாதனை என்று பரிசுகளும், ஊக்கத்தொகையும் அறிவிக்கப்படும் நிலையில், மாற்று திறனாளி வீரர்களுக்கு காட்டப்படும் இந்த பாகுபாடு ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருபுறம் செக்யூரிட்டி வேலை செய்யும் தந்தை, அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ள தாய், இதற்கு மத்தியில் அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கான கனவோடு பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார் பிளாட்டினி.