வீட்டில் வளர்த்த நாய் கடித்ததில் கிரிக்கெட் வீரருக்கு கையில் தையல் போடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிஆர்ஸி ஷார்ட். இவர் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடியவர். இவர் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அதோடு விளையாடி கொண்டிருந்தபோது அந்த நாய் டிஆர்ஸி ஷார்ட்டை கடித்து விட்டது. இதில் அவரது இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், கையில் தையல் போட வேண்டும் என்றார். இதையடுத்து தையல் போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்த மாத தொடக்கத்தில் நடந்துள்ளது.
இது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கும் ஒரு நாள் கோப்பை தொடரில் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதே போல ஆல்ரவுண்டர் ஸ்டோயினிஸ், மாத்யூ கெல்லி ஆகியோரும் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர்.