விசாகப்பட்டினம் எங்கள் ஊர் போலவே இருக்கிறது என்று இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் திசாரா பெரேரா சொன்னார்.
இலங்கை- இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் மூன்றாவது, ஒரு நாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் போட்டி என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இன்றைய போட்டி பற்றி இலங்கை கேப்டன் திசாரா பெரேரா கூறும்போது, ‘விசாகப்பட்டினம் இலங்கை மாதிரியே இருக்கிறது. சீதோஷ்ண நிலையில் இருந்து எல்லாமே அப்படித்தான் இருக்கிறது. மொகாலி, தர்மசாலா இரண்டும் வேறு மாதிரி இருந்தன. அதில் இருந்து இந்த மைதானம் எங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது. அதனால் உள்ளூரில் ஆடுவது போன்று இங்கும் சாதிக்க முடியும். இந்த போட்டிக்காக சிறந்த முறையில் தயாராகி இருக்கிறோம். இதை இன்னொரு சாதாரண ஆட்டமாகவே நினைத்து விளையாடுவோம். இங்கு எங்களால் சிறப்பாக ஆட முடியும் என நினைக்கிறேன். ஆனால், சிறந்த அணியான இந்தியாவுக்கு நிச்சயம் நெருக்கடி இருக்கும்.
எங்களது பந்து வீச்சு மொகாலியில் சரியாக எடுபடவில்லை. இப்போது எங்கள் பந்துவீச்சாளர்கள் மனரீதியாக தயாராகி இருக்கிறார்கள். அதனால் சிறப்பாக பந்துவீசுவோம். முந்தைய ஆட்டத்தில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு இதில் வெற்றிபெறுவோம்’ என்றார்.