விளையாட்டு

“பாலியல் தொந்தரவுகளை வெளியே சொல்லுங்கள்”- பி.வி.சிந்து

“பாலியல் தொந்தரவுகளை வெளியே சொல்லுங்கள்”- பி.வி.சிந்து

webteam

வெளிநாடுகளில் பெண்களுக்கு அதிக மரியாதை கொடுக்கப்படுவதாகவும் ஆனால் இந்தியாவில் வாய்மொழியில் மட்டுமே உள்ளது. நடைமுறைப்படுத்துவதில்லை எனவும் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.

வேலையிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை எதிர்கொள்வது குறித்து ஹைதராபாத் போலீசார் பாலியல் தொந்தரவு அவுட் என்ற கருத்தரங்கு ஒன்றை நடத்தினர். இதில் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, “இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வெளிநாடுகளில் பெண்களுக்கு அதிக மரியாதை கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் பழக்கம் வெறும் வாய்மொழியில் மட்டுமே உள்ளது. பெரும்பாலானோர் கடைபிடிப்பதில்லை.

நான் எல்லோருக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால், மற்றவர்களுக்கு மதிப்பு கொடுங்கள். குறிப்பாக பெண்களுக்கு மரியாதை கொடுங்கள். பெண்கள் வலிமையானவர்கள் என்றும் அவர்களால் எதுவும் முடியும் என்றும் முதலில் பெண்கள் நம்ப வேண்டும். உடலளவிலும் மனதளவிலும் பெண்கள் பாலியல் தொந்தரவுகளை அனுபவித்தால் முதலில் அதை தைரியமாக வெளியே கொண்டு வாருங்கள். இதற்காக வெட்கப்படத் தேவையில்லை. 

மேலும் ஹேஸ்டேக் மீ டூ இயக்கம் பணியிடத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இது பெண்கள் மற்றும் ஆண்களுக்கு சமூகப் பொறுப்புகளை உணர்த்தியுள்ளது. பெண்கள் பணிக்குச் செல்லக் கூடாது. வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணம் முன்பு இருந்தது. ஆனால், தற்போது சமூகம் முற்றிலும் இந்த விஷயத்தில் மாறியுள்ளது.” எனத் தெரிவித்தார்.