ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை வென்று ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 42 வது லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிருத்வி ஷாவும் ஜேசன் ராயும் களமிறங்கினர். இருவரும் நிலைத்து நிற்கும் முன்பே அவுட் ஆயினர். பிருத்வி ஷா 9 ரன்னிலும் ராய் 11 ரன்னிலும் ஷகிப் அல் ஹசன் பந்தில் அடுத்தடுத்து அவுட் ஆயினர். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 3 ரன் எடுத்திருந்தபோது தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார்.
பின்னர் வந்த விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் அதிரடியாக விளையாடினார். ஒத்தையில நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஐதராபாத் பந்துவீச்சாளர்களை பந்தாடிய அவர், 7 சிக்சர், 15 பவுண்டரிகளுடன் 63 பந்துகளில் 128 ரன்கள் குவித்தார். இந்த ஐபிஎல் தொடரில் இந்திய வீரர் ஒருவர் அடித்த முதல் சதம் இது. ஒட்டு மொத்தமாக இந்த ஐபிஎல்லில் அடிக்கப்பட்ட 3-வது சதம் இது.
அடுத்து ஹர்ஷல் படேல் 24 ரன்களும் மேக்ஸ்வெல் 9 ரன்களும் எடுத்தனர். அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது.
ஐதராபாத் அணி தரப்பில் புவனேஷ்வர் குமாரும் சித்தார்த் கவுலும் ரன்களை வாரி வழங்கினர். புவனேஷ்வர்குமார் 4 ஒவரில் 51 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். சித்தார்த் கவுல் 48 ரன்களை கொடுத்தார். ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹேல்ஸ் 14 ரன்களில் ஹர்ஷத் படேல் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். பின்னர், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுடன் சேர்ந்தார் கேப்டன் வில்லியம்சன். இருவரும் டெல்லி அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். இவர்களை டெல்லி அணியால் பிரிக்க முடியவில்லை.
தவான், 4 சிக்சர், 9 பவுண்டர்களுடன் 50 பந்துகளில் 92 ரன்களும் வில்லியம்சன் 2 சிக்சர், 8 பவுண்டர்களுடன் 53 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தனர். ஐதராபாத் அணி, 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது. ஆட்டநாயகன் விருது ஷிகர் தவானுக்கு வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. டெல்லி பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது.