தென்னாப்பிரிக்கத் தொடரில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்படுவார் என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குளூஸ்னர் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஆறு ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 தொடர்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி, கேப்டவுனில் நாளை தொடங்குகிறது.
இதுபற்றி குளூஸ்னர் கூறும்போது, ’இந்தத் தொடரில் இந்திய அணியின் ஹர்திக் பாண்ட்யா முக்கிய வீரராக செயல்படுவார் என நினைக்கிறேன். பேட்டிங் மற்றும் மித வேகப்பந்துவீச்சில் அவரது பங்களிப்பு சிறப்பாக இருக்கும். அவர் திறமையான ஆல்ரவுண்டர். அவருக்கு எதிராக தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் ’ஷார்ட் பால்’களை வீசினால், அவரது விக்கெட்டை வீழ்த்த முடியும். ஆனால், இந்த பந்துகளை சமாளித்து நிலைத்து நின்றுவிட்டால், போட்டியை மாற்றும் வீரராக அவர் இருப்பார். இரண்டு அணிகளுமே இப்போது சிறப்பான அணிகளாக இருக்கின்றன. தென்னாப்பிரிக்காவில் ஸ்டெயின், மோர்க்கல், ரபாடா, பிளெண்டர் போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் மிரட்டுவார்கள். அதே நேரம் அஸ்வின், ஜடேஜாபோன்ற சுழல்பந்துவீச்சாளர்கள் இந்திய தரப்பில் சிறப்பாக செயல்படுவார்கள்’ என்றார்.