pakistan x page
விளையாட்டு

PAK Vs ZIM | ஜிம்பாப்வே அணியை 5 ஓவரிலேயே ஊதித்தள்ளி பாகிஸ்தான் அபார வெற்றி!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 2வது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

Prakash J

ஜிம்பாப்வே நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, அந்த நாட்டு அணியுடன் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில், தற்போது இரு அணிகளும் டி20 தொடரில் விளையாடி வருகின்றன. 3 போட்டிகள் இந்தத் தொடரில் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் வென்றிருந்த நிலையில், இன்று (டிச.3) 2வது போட்டி நடைபெற்றது.

இதையடுத்து, இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. இதில் தொடக்க பேட்டர்களான பென்னட்டும் (21 ரன்கள்) மருமணியும் (16 ரன்கள்) கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்து விளையாடியனர். இந்த இணை 37 ரன்கள் வரை விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டது. ஆனால், அதற்குப் பின் வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கை ரன்னில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். அதில் 3 பேர் டக் அவுட் முறையில் வீழ்ந்திருந்தனர்.

அதாவது அடுத்த 20 ரன்னில் 8 விக்கெட்டுகளையும் இழந்து, மொத்தத்தில் 12.4 ஓவரில் 57 ரன்னில் சுருண்டது. பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சுபியான் முக்கீம் 2.4 ஓவர்கள் வீசி வெறும் 3 ரன்களே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை எடுத்தார்.

பின்னர், 58 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 5.3 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 61 ரன்களை எடுத்ததுடன், தொடரையும் கைப்பற்றியது. அந்த அணியின் தொடக்க வீரர் சாயிம் அயூப் 18 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். மற்றொரு வீரர் 15 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.