விளையாட்டு

பாகிஸ்தான்-இலங்கை போட்டி மழையால் ரத்து : 10 ஆண்டுகள் காத்திருப்பு வீண்

webteam

பாகிஸ்தானில் இன்று நடைபெறவிருந்த இலங்கை-பாகிஸ்தான் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்தானது.

பாகிஸ்தான் நாட்டிற்கு இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இதில் மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் இரண்டு அணிகளும் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டி இன்று கராச்சி மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்திய நேரப்படி மதியம் மூன்று மணியளவில் போட்டி தொடங்க இருந்த நிலையில், மழையால் டாஸ் போடப்படவில்லை. அத்துடன் தொடர்ந்து மழை நிற்காமல் பெய்ததால், போட்டி தொடங்காமலே ரத்து செய்யப்பட்டது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

கடந்த 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாகிஸ்தானில் ஒருநாள் போட்டி நடைபெறவிருந்த நிலையில் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. 2009ஆம் ஆண்டு இலங்கை அணி சுற்றுப்பயணம் சென்றிருந்த போது, பயங்கரவாதிகள் இலங்கை வீரர்கள் சென்ற வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர். இதனால் எந்த அணியும் பாகிஸ்தான் செல்லாமல் இருந்தன. கடந்த ஆண்டு இலங்கை அணி ஒரு டி20 போட்டியை பாகிஸ்தானில் விளையாடியது. வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 தொடர் ஒன்றில் விளையாடியது. இருப்பினும் ஒருநாள் போட்டி எதுவும் இதுவரை நடைபெறவில்லை.