விளையாட்டு

“அப்போ 400 ரன்கள் அடிக்க மாட்டிங்களா...” - கவலையில் பாகிஸ்தான் ரசிகர்கள்

rajakannan

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து சிறப்பாக விளையாடிய இமாம்-உல்-ஹாக் ஹிட் விக்கெட் ஆனார்.

பாங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி ஏதேனும் மேஜிக் செய்தால் மட்டுமே அரையிறுதிக்குள் நுழைய முடியும். அதாவது, பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்து, 400 ரன்கள் எடுக்க வேண்டும். பங்களாதேஷை 316 ரன் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். பாகிஸ்தான் 350 ரன்கள் குவித்தால், பங்களாதேஷை 38 ரன்னில் சுருட்ட வேண்டும். அதோடு, டாஸ் வென்று பாகிஸ்தான் முதலில் பேட் செய்தால்தான் இந்த வாய்ப்பும் கிடைக்கும். அந்த வகையில் பாகிஸ்தான் அணி இன்று டாஸ் வென்று முதலில் பேட்டிங்கும் செய்தது. 

முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போட்டியில் ஃபாகர் சமான் 31 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், இமாம் உல் ஹாக் உடன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. 146 பந்துகளில் 150 ரன்கள் எடுத்து இந்த ஜோடி வலுவான அடித்தளம் அமைத்தது. ஆனால், இருவரும் மிகப்பெரிய ஷாட்களை தேர்வு செய்யவில்லை. குறிப்பாக சிக்ஸர்களே அடிக்கவில்லை. ரன் ரேட் 6க்கும் குறைவாகவே சென்றது. 400 ரன்களுக்கு கிட்ட அடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் ரன் ரேட் அதிகமாகாதது பாகிஸ்தான் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.

சிறப்பாக விளையாடி வந்த பாபர் அசாம் 98 பந்துகளில் 96 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சதம் விதம் அடித்த இமாம்-உல்-ஹாக் ஹிட் விக்கெட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இந்த ஜோடியின் ஆட்டமிழப்பால் பாகிஸ்தான் அணியின் சரிவு தொடங்கியது. முகமது ஹபீஸ் 27, சோஹைல் 6 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் அணி 46 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் எடுத்துள்ளது. 

இன்னும் 4 ஓவர்கள்தான் பாகிஸ்தான் அணி வசம் உள்ளது. நிச்சயம் அந்த அணியால் 350 ரன்களை எட்ட முடியாது. 300 ரன்களை கடக்கலாம். 400 ரன்களுக்கு நெருக்கமாக அடிக்க முடியாமல் போனதால் பாகிஸ்தான் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். தங்களது வருத்தத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.