விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட்டில் பாபர் அசாம் புதிய சாதனை - யாரை முந்தினார்?

ஒருநாள் கிரிக்கெட்டில் பாபர் அசாம் புதிய சாதனை - யாரை முந்தினார்?

JustinDurai

பாபர் அசாம் ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவில் 4,000 ரன்களை குவித்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் லாகூரில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள்  போட்டியில் ஆஸ்திரேலிய அணி  88 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் அரை சதமடித்து, 57 ரன்னில் வெளியேறினார். சர்வதேச கிரிக்கெட்டில் பல புதிய சாதனைகளை நிகழ்த்திவரும் பாபர் அசாம், இந்த போட்டியின் மூலம் 4,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

தனது 82வது சர்வதேச ஒருநாள் இன்னிங்ஸில் 4,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் 4,000 ரன்கள் என்ற மைல்கல்லை விரைவாக எட்டிய வீரர்களில் ஹாஷிம் ஆம்லாவிற்கு அடுத்து 2ம் இடத்தை  பிடித்துள்ளார் பாபர் அசாம். ஹாஷிம் ஆம்லா 81 இன்னிங்ஸ்களில் 4,000 ரன்கள் என்ற மைல்கல்லை ஒருநாள் கிரிக்கெட்டில் எட்டினார். வெஸ்ட் இண்டீஸின் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் 91 இன்னிங்ஸ்களிலும், விராட் கோலி மற்றும் டேவிட் வார்னர் 93 இன்னிங்ஸ்களிலும் 4,000 ரன்கள் என்ற மைல்கல்லை ஒருநாள் கிரிக்கெட்டில் எட்டினர்.

3,000 ரன்களிலிருந்து 4,000 ரன்களை எட்ட 14 இன்னிங்ஸ்கள் மட்டுமே எடுத்துக்கொண்டுள்ளார் பாபர் அசாம். இதே 3,000-4,000 ரன்களுக்கு டேவிட் வார்னர் 12 இன்னிங்ஸ்கள் எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அபார பேட்டிங்! அட்டகாச பவுலிங் - சன்“ரைஸ்“ ஆகாமல் தடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ்!