பாகிஸ்தானில் நடக்க இருந்த டி20 போட்டியை ஒத்தி வைத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம், இப்போது மார்ச் மாதம் போட்டியை நடத்த ஒப்புக்கொண்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தானில் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டிருந்தது. ஆனால் வெஸ்ட் இஸ்டீஸ் அணியைச் சேர்ந்த மூத்த வீரர்கள் கிறிஸ் கெயில், பொல்லார்ட், பிராவோ ஆகியோர் பாதுகாப்பைக் காரணம் காட்டி அங்கு விளையாட மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் ஒத்திவைத்தது.
இந்நிலையில் பாகிஸ்தானில் மார்ச் மாதம் நடக்கும் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி கலந்துகொள்ளும் என்று அந்நாட்டு வாரியம் உறுதியளித்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேத்தி தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் நடக்க இருந்த இந்தப் போட்டி, அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றும் வீரர்களுக்கான பாதுகாப்பு மற்றும் சீதோஷ்ணநிலை காரணமாக போட்டி மாற்றி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்ல மற்ற நாட்டு அணிகள் தயக்கம் காட்டி வந்தன. இருப்பினும், பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட்டை கொண்டுவர அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. அதன் காரணமாக, பாகிஸ்தான், உலக லெவன் அணிகள் மோதிய 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் கடந்த செப்டம்பரில் நடந்தது. சமீபத்தில் இலங்கை அணி பங்கேற்ற ஒரே ஒரு டி20 போட்டி லாகூரில் நடந்தது.