இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 11 வது முறையாக தொடரை வென்று பாகிஸ்தான் அணி அசத்தியுள்ளது.
பாகிஸ்தான் - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றது. இரண்டாவது போட்டி துபாயில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. முன்றோ 28 பந்துகளில் 44 ரன்னும் ஆண்டர்சன் 25 பந்துகளில் 44 ரன்னும் கேப்டன் வில்லியம்சன் 37 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷகின் அப்ரிதி 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் விட்டுக்கொடுத்து, 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் பாபர் அஸாம் 40 ரன்களும் ஆசிப் அலி, முகமது ஹபீஸ் முறையே, 38, 34 ரன்னும் எடுத்தனர். மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய ஷகீன் அப்ரிதிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட்டில், பாகிஸ்தான் அணி தொடர்ந்து 11ஆவது தொடரை வென்று அசத்தியுள்ளது.