பயம், அழுத்தம் இதையெல்லாம் மனதிலிருந்து வெளியேற்றிவிட்டு கடைசி பந்துவரை உங்களால் முடிந்த அளவு போராடுங்கள். அதன்பின் வரும் முடிவை ஒரு உண்மையான விளையாட்டு வீரராக ஏற்றுக்கொள்ளுங்கள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு கிரிக்கெட் வீரர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
உலகமே எதிர்பார்க்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெறும் போட்டியை காண உலகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் அங்கு திரண்டுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவுரை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள இம்ரான் கான், “ என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கும்போது, வெற்றி என்பது 70 சதவீதம் திறமையாலும், 30 சதவீதம் மன வலிமையாலும் கிடைக்கிறது என நினைத்தேன். அதுவே நான் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து வெளியேறும்போது வெற்றியில் திறமை 50 சதவீதமும், மன உறுதி 50 சதவீதமும் இருப்பதாக எண்ணினேன்.
ஆனால் தற்போது வெற்றியில் 60 சதவீதம் மன உறுதி மற்றும் 40 சதவீதம் திறமையின் பங்கு என கூறும் கவாஸ்கரின் கூற்றை ஏற்கிறேன். இன்றைய போட்டியில் கிடைக்கும் வெற்றியில் மன வலிமை என்பது 60 சதவீதற்கும் அதிகமான பங்கினை வகிக்கும்.
இரண்டு அணிகளுக்குமே மன அளவிலான ஒரு பெரிய அழுத்தம் இருக்கும். ஆனால் மன வலிமை அதிகமாக இருக்கும் அணியே வெற்றி பெறும். நாங்கள் ஒரு தைரியமான கேப்டனையே கொண்டிருக்கிறோம். அவர் இன்று துணிச்சலுடன் இருக்க வேண்டும். மனதில் இருக்கும் எல்லா பயத்தையும் வெளியேற்றிவிட்டு போட்டியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். தோற்றுவிடுவோமோ என்கிற பயமே எதிர்மறை எண்ணத்தை உருவாக்கிவிடும். இதுவே பாகிஸ்தான் அணிக்கு நான் அளிக்கும் அறிவுரை.
சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்களோடு கேப்டன் சர்ஃபராஸ் செல்ல வேண்டும். டாஸில் வெற்றிப் பெற்றால் சர்ஃபராஸ் பேட்டிங் தேர்வு செய்ய வேண்டும். கடைசி பந்துவரை பயமில்லாமல் உறுதியாக போராடுங்கள். அதன்பின் ஒரு உண்மையான விளையாட்டு வீரராக போட்டியில் வரும் முடிவை ஏற்றுக்கொள்ளுங்கள. நாட்டு மக்கள் உங்கள் பக்கம். வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.