சாம்பியன்ஸ் கோப்பை வெற்றியைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளுக்கான சர்வதேச கிரிக்கெட் தரவரிசையில் பாகிஸ்தான் அணி 8ஆவது இடத்திலிருந்து 6ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய தரவரிசைப் பட்டியலில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளை பின்னுக்குத் தள்ளி, பாகிஸ்தான் அணி 6ஆவது இடம் பெற்றுள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னர் பாகிஸ்தான் அணி, சர்வதேச ஒருநாள் போட்டி தரவரிசையில் 8ஆவது இடம் பெற்றிருந்தது. இந்த பட்டியலில் தென்னாப்பிரிக்க அணியே முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலிய அணி 2ஆவது இடத்திலும், இந்திய அணி 3ஆவது இடத்திலும் நீடிக்கின்றன. இங்கிலாந்து அணி 4ஆவது இடத்திலும், நியூசிலாந்து அணி 5ஆவது இடமும் பெற்றுள்ளன.
வீரர்களைப் பொறுத்தவரை இந்திய அணி கேப்டன் விராத் கோலி முதலிடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இரண்டாவது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர். அதேபோல தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் ஏ.பி.டிவிலியர்ஸ் 3ஆவது இடத்திலும், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 4ஆவது இடத்திலும் இருக்கின்றனர். பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம், 3 இடங்கள் முன்னேறி 5ஆவது இடம்பிடித்துள்ளார். மற்ற இந்திய வீரர்களைப் பொறுத்தவரை, வங்கதேசத்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் சதமடித்த ரோகித் ஷர்மா 3 இடங்கள் முன்னேறி பத்தாவது இடத்தினை சகவீரரான ஷிகர் தவானுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி ஒரு இடம் பின்தங்கி 15ஆவது இடம் பிடித்துள்ளார்.