விளையாட்டு

'ஐபிஎல் எல்லாம் ஜுஜுபி.. பிஎஸ்எல் லீக்தான் கஷ்டமானது' - முகமது ரிஸ்வான்

JustinDurai

2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் ஐபிஎல் போட்டியில் சேர்க்கப்படவில்லை.

ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முகமது ரிஸ்வான் 2-வது இடத்தில் இருக்கிறார். இந்நிலையில், ஐபிஎல்லை விட பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தான் உலகிலேயே மிகவும் கடினமான ஓர் லீக் எனக் கூறியுள்ளார் முகமது ரிஸ்வான். இது தொடர்பாக முகமது ரிஸ்வான் பேட்டி ஒன்றில் கூறுகையில், ''பாகிஸ்தான் சூப்பர் லீக் உலகம் முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிஎஸ்எல் தொடர் தேறாது என தொடங்குவதற்கு முன்னர் சில பேச்சுகள் இருந்தன. ஆனால் ஒரு வீரராக என்னைப் பொறுத்தவரை பிஎஸ்எல் உலக அரங்கில் தனது வெற்றியை பதிவு செய்துள்ளது என்பேன். பி.எஸ்.எல்.லில் விளையாடிய உலகெங்கிலும் உள்ள வீரர்களிடம் பிஎஸ்எல் கடினமா? இல்லை ஐபிஎல் கடினமா? என கேட்டால் அவர்கள் பிஎஸ்எல் தான் மிகவும் கடினமானது என கூறுவர்.

பிஎஸ்எல்லில் ஆடும் வீரர்கள் பலர் சர்வதேச அளவில் பெஞ்சில் உட்கார வைக்கப்படுகின்றனர். பாகிஸ்தான் அணி சிறந்த மாற்று வீரர்களை கொண்டுள்ளது. அதற்கு மிக முக்கிய காரணம் பிஎஸ்எல் தான். பிஎஸ்எல் அதற்கான பெருமையைப் பெற வேண்டும்'' என்றார்.

2008-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் ஐபிஎல் போட்டியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.