விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா-உல்-ஹக் ராஜினாமா

EllusamyKarthik

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து மிஸ்பா-உல்-ஹக் ராஜினாமா செய்துள்ளார். அவருடன் சேர்ந்து பந்துவீச்சு பாயிற்சியாளர் வாக்கர் யூனிஸும் விலகியிருக்கிறார். இருவரும் ஒரே நேரத்தில் பதவியை துறந்துள்ளது சர்வதேச கிரிக்கெட் களத்தில் பேசுபொருளாகி உள்ளது.

நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் அவர்கள் பதவி விலகி உள்ளனர். இதனையடுத்து நியூசிலாந்து தொடருக்கான இடைக்கால பயிற்சியாளர்களாக ஷக்லைன் முஷ்டக் மற்றும் அப்துல் ரசாக் நியமிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 2019 செப்டம்பரில் மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் மிஸ்பா தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவரது ஒப்பந்தம் முடிய இன்னும் ஒரு ஆண்டு காலம் உள்ள நிலையில் ராஜினாமா செய்துள்ளார். அந்த அணியின் முன்னாள் கேப்டனான மிஸ்பா 2007 டி20 உலகக் கோப்பையில் இறுதிப்போட்டி வரை அணியை முன்னேற செய்திருந்தார். விரைவில் அமீரகத்தில் ஆரம்பமாக உள்ள டி20 உலகக் கோப்பையில் அவரது பயிற்சியின் கீழ் பாகிஸ்தான் அணி கலக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது இப்போது முற்று பெற்றுள்ளது.