மேட்ச் பிக்ஸிங் மூலமே சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதிபெற்றதாக அந்நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரர் அமீர் சோஹைல் அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், சிறப்பான விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தும்போது அணியை நாம் பாராட்டலாம். அதேநேரம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத போது விமர்சிப்பது வழக்கம். ஆனால், சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது குறித்து பாகிஸ்தான் அணியினர் அதிக மகிழ்ச்சி கொள்ள வேண்டாம். அவர்கள் எப்படி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்கள் என்பதை நாங்கள் அறிவோம் என்று கூறியுள்ளார். வெளிக் காரணங்களின் மூலம் தகுதி பெற்றதாக அவர் கூறினார்.
மேட்ச் பிக்ஸிங் மூலம்தான் தகுதி பெற்றனர் என்பதை மறைமுகமாக வெளிக்காரணங்கள் என்று கூறிய அவர், மேட்ச் பிக்ஸிங் எப்படி, எப்போது நடந்தது என்பது குறித்து வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. இருப்பினும் அமீர் சோஹைலின் குற்றச்சாட்டு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சோஹைலின் குற்றச்சாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, அவரின் கருத்துகள் மோசமான காலாசாரத்தை குறிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது மற்றும் வீரர்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது இது முதல் முறையல்ல. வீரர்கள் களத்தில் செயல்படுவதைப் பொறுத்தே இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது அமையும். இதில் வெளியில் இருந்து ஒருவர் எவ்வாறு உதவிட முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்ஃப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணியை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் தொடர் ஒன்றின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெறுவது கடந்த 1999ம் ஆண்டுக்குப் பின்னர் இதுவே முதல்முறையாகும். கடந்த 1999ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.