விளையாட்டு

"இந்திய வீரர்கள் நாட்டுக்காக விளையாடவில்லை" இன்சமாம் உல் ஹக்கின் சர்ச்சை பேச்சு !

"இந்திய வீரர்கள் நாட்டுக்காக விளையாடவில்லை" இன்சமாம் உல் ஹக்கின் சர்ச்சை பேச்சு !

jagadeesh

இந்திய கிரிக்கெட் வீரர்கள் எப்போதும் நாட்டுக்காக விளையாடவில்லை சொந்த சாதனைகளுக்காகவே விளையாடினார்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் சர்ச்சைக்குறிய வகையில் பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருப்பதால் பல இந்நாள் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். ஆனாலும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களிடையே உரையாற்றி வருகின்றனர். மேலும் சில யூடியுப் சேனல்களிலும் பேட்டியளித்து வருகின்றனர். அப்போது பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பிரபல வர்ணனையாளருமான ரமீஸ் ராஜாவுக்கு பேட்டியளித்த இன்சமாம் உல் ஹக், 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பை நினைவலைகளை பகிர்ந்துக்கொண்டார்.

அப்போது பேசிய இன்சமாம் " நான் கிரிக்கெட் விளையாடிய நாட்களில், இந்திய அணி பேப்பர் அளவில் மிகப்பெரிய சாதனைகள் கொண்ட அணியாக இருக்கும். ஆனால் நாங்கள் 30 அல்லது 40 ரன்கள் அடித்திருந்தாலும் அது அணிக்காக அடித்ததாகவே இருக்கும். அவர்களில் ஒருவர் 100 ரன்கள் அடித்தால் கூட அது அணிக்காக இருக்காது. அவர்களின் சொந்த சாதனைக்கானதாகவே இருக்கும். அது தான் இரு அணிகளுக்கும் இடையிலான மிகப்பெரிய வித்தியாசம். இந்திய வீரர்கள் சொந்த சாதனைகளுக்காகவே விளையாடினார்கள் எங்கே அணியிலிருந்து தூக்கிடுவார்களோ என்ற பயமும் இருந்தது. ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் அப்படி இல்லை" என சகட்டுமேனிக்கு கொளுத்திப்போட்டுள்ளார்.

இத்துடன் நிற்காமல் தொடரந்து பேதிய இன்சமாம் "கிரிக்கெட்டை பொறுத்தவரையில் இந்தியா, பாகிஸ்தானுக்கு எப்போதும் நல்ல உறவு கிடையாது. கடந்த 2008 மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இருநாட்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவில்லை. இருந்தாலும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருந்தாலும் இந்திய அரசும், பிசிசிஐயும் இதை கொஞ்சம் கூட கண்டுகொள்வதில்லை" என கூறியுள்ளார்.