வாஹா எல்லையில், இந்திய பாதுகாப்பு படை வீரர்களை அவமதிக்கும் வகையில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நடந்து கொண்ட விதத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்தியா- பாகிஸ்தான் எல்லையான வாஹாவில் இரு நாட்டு தேசியக் கொடிகளை இறக்கும் நிகழ்ச்சியைப் பார்க்க ஏராளமான மக்கள் கூடுவது வழக்கம். அவர்கள் இரு நாட்டு வீரர்களின் அணிவகுப்பை ரசிப்பார்கள். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று வாஹா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. பாகிஸ்தான் வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்துக்கொண்டு இருந்த போது, அந்த நாட்டின் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி, வேகமாக அணிவகுப்புக்குள் வந்தார்.
இந்தியாவின் எல்லைப்பகுதியைப் பார்த்து, இந்திய வீரர்களுக்குச் சவால் விடும் வகையில், சில சைகைகளை செய்தார். பிறகு தொடையை தட்டியும், கிரிக்கெட் போட்டியின் போது விக்கெட் எடுத்ததும் இரண்டு கைகளையும் தூக்கிக்கொண்டு நிற்பது போல நின்றும் இந்திய பாதுகாப்புப்படை வீரர்களை கேலி செய்து. அவமதித்தார். இதை அங்கிருந்த பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்பு படையினர் கண்டிக்காமல் ரசித்தனர். பின்னர் அவரை பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.
இந்த வீடியோவை ஹசன் அலி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது, இந்த வீடியோ. ஹசன் அலியின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. கண்டனங்களும் எழுந்துள்ளன.
இதுகுறித்து பஞ்சாப் எல்லைப் பாதுகாப்புப் படை ஐஜி முகுல் கோயல் கூறும்போது, ‘ஹசன் அலியின் செயல் இருநாட்டு அணிவகுப்பு மரியாதைக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முறைப்படி பாகிஸ்தான் ராணுவத்திடம் புகார் அளிப்போம். அணிவகுப்பு நடக்கும்போது பார்வையாளர்கள் அவர்கள் பகுதியில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், அணிவகுப்புக்குள் வர அனுமதியில்லை’ என்றார்.