விளையாட்டு

லார்ட்ஸ் மைதானத்தில் மழை: யாருக்கு சாதகம்?

லார்ட்ஸ் மைதானத்தில் மழை: யாருக்கு சாதகம்?

webteam

மழை பெய்துவருவதால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. அடுத்து நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது.  இதைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியடைந்தது.

இந்நிலையில் 2 வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால், டாஸ் போடப்படாமல் முதல் நாள் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்தப் போட்டியை எதிர்பார்த்துக்கொண்டிருந்த இங்கிலாந்து மற்றும் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மூன்று முறை நடுவர்கள் மைதானத்துக்கு வந்து பார்வையிட்டனர். ஆனால், மழை விட்டு விட்டு பெய்துகொண்டே இருந்ததால் முதல் நாள் போட்டி கைவிடப்பட்டது. 

இந்நிலையில் இன்று போட்டி தொடங்குகிறது. வழக்கமாக இந்திய நேரப்படி 3.30 மணிக்கு போட்டித் தொடங்கும். இன்றைய போட்டி அரை மணி நேரம் முன்னதாகத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை, காலையில் வெயிலும் மாலையில் லேசாக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய போட்டியும் மழையால் பாதிக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. 

லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. 11 போட்டிகளில் தோல்வி கண்டிருக்கிறது. நான்கு வருடத்துக்கு முன் இங்கு நடந்த போட்டியில் ரஹானே சதம் அடித்தார். இஷாந்த் சர்மா 7 விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த போட்டியில் ஆடும் லெவனில் சேர்க்கப்படாமல் இருந்த புஜாரா இன்றைய போட்டியில் சேர்க்கப்படுவார் எனத் தெரிகிறது.

மழை பெய்துவருவதால் மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்றும் பந்து ஸ்விங் ஆக அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்தப் போட்டியை போல ஒரே ஒரு சுழல் பந்துவீச்சாளருடன் இந்திய அணி களமிறங்கும் என்று தெரிகிறது.