விளையாட்டு

யூரோ 2020: இத்தாலி கால்பந்து அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் ஒருவர் பலி, பலர் காயம்

Veeramani

ஞாயிற்றுக்கிழமை நடந்த யூரோ 2020 இங்கிலாந்து  கால்பந்து அணியுடனான இறுதிப் போட்டியில் இத்தாலி அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து நடந்த கொண்டாட்டங்களில் ஒருவர் உயிரிழந்தார், பலர் காயமடைந்தனர்.

வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சிசிலியில் உள்ள கால்டகிரோனுக்கு சென்றுகொண்டிருந்த 22 வயது இளைஞர் ஒருவர் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மேலும், இத்தாலியின் பொருளாதார தலைநகரான மிலனில் நடந்த வெற்றி கொண்டாட்டத்தில் 15 பேர் காயமடைந்தனர், மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். பட்டாசு வெடித்ததில் ஒருவர் மூன்று விரல்களை இழந்தார்.

இத்தாலியின் தெற்கு நகரமான ஃபோகியாவுக்கு அருகிலுள்ள ஒரு நகரத்தில், ஒரு மர்ம நபர் வாகனத்தில் வந்த ஒருவரை தாக்கிய சம்பவமும் நடந்திருக்கிறது. இதில் தாக்கப்பட்ட நபருடன் வந்த ஆறு வயது சிறுமியும் காயமடைந்து மிகவும் மோசமான  நிலையில் இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன.

1968 க்குப் பிறகு இத்தாலி அணி கோப்பையை வென்றுள்ளது. இறுதிப்போட்டியில் இத்தாலி- இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் இருந்ததால், பின்னர் நடைபெற்ற  பெனால்டி ஷூட் அவுட்டில் 3-2 என்ற கோல்கள் அடிப்படையில் இத்தாலி வெற்றி பெற்றது.