லட்சியம் நோக்கி கடுமையாக முயன்றால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஏராளமான தன்னம்பிக்கை கதைகள், இருக்கிறது. அப்படியொரு கதையாக, ஈரான் கால்பந்து அணியின் கோல் கீப்பர் வாழ்க்கையையும் சேர்த்துக்கொள்ளலாம்!
ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடந்து வருகிறது இப்போது. இதன் ’பி’ பிரிவு ஆட்டத்தில் ஈரான் மற்றும் ரொனால்டோ தலைமை யிலான போர்ச்சுகல் அணிகள் நேற்று மோதின. 2 வது சுற்றை உறுதி செய்ய இந்த மோதலில் போர்ச்சுகல் டிரா செய்தால் போதுமானது. ஆனால், அடுத்த சுற்று கனவு நனவாக இந்த ஆட்டத்தில் வென்றால் மட்டுமே சாத்தியமாகும் என்ற சூழலில் களம் இறங்கியது ஈரான்.
பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் இரண்டு அணிகளுமே தலா ஒரு கோல் மட்டுமே அடித்ததால், போட்டி சமனில் முடிந்தது. இந்த போட்டி யின் போது பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு கோல் அடிக்க முயன்றார் ரொனால்டோ. அந்த பந்தை அபாரமாக தடுத்தார் ஈரான் கோல் கீப்பர் அலிரெஸா பெய்ரன்வண்ட். இதையடுத்து ஒரே நாளில் உலக ஃபேமஸ் ஆகிவிட்டார். கால்பந்து ரசிகர்கள் அவரைக் கொண்டாடத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் அவர் சாலையில் படுத்துக்கிடந்து நாடோடி வாழ்க்கை வாழ்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
ஈரானின் லோரஸ்டான் பகுதியில் உள்ள சரேப் -இ யாஸ் என்ற சிறு கிராமத்தில் பிறந்த அலிரெஸா, வீட்டில் இருந்து ஓடி தலைநகர் தெஹ் ரானுக்கு வந்தவர். எப்படியாவது கால்பந்துவீரர் ஆகவேண்டும் என்பதுதான் அவர் கனவு. இதனால் தெஹ்ரான் வீதிகளில் படுத்து தூங்கி நாடோடி வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். சாப்பாட்டுக்காக கிடைத்த வேலையை எல்லாம் செய்திருக்கிறார். கால்பந்து மைதானம் ஒன்றில் வெளியே அவர் படுத்து தூங்கியபோது, பாவம் என்று நினைத்து சிலர் பணத்தை எறிந்துவிட்டு சென்ற கதையெல்லாம் நடந்திருக்கிறது.
கார் கழுவும் வேலையையும் செய்திருக்கிறார். பிறகு படிப்படியாக முன்னேறி ஈரான் தேசிய அணியின் கோல் கீப்பர் ஆகியிருக்கிறார். கடந்த ஆண்டு உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் சிறந்த வீரர் விருதையும் வென்றிருக்கிறார் இவர்.
இத்தகவலை ஈராக்கைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஸ்டீவன் நஹில் தெரிவித்திருக்கிறார்