விளையாட்டு

“உலக கோப்பையை வெல்ல அந்த ஒரு சிக்ஸ் மட்டும் காரணமா?; எல்லாம் வழிபாடுதான்"- கவுதம் காம்பீர்

EllusamyKarthik

“உலக கோப்பையை வெல்ல தோனி அடித்த அந்த ஒரே ஒரு சிக்ஸ் மட்டும் காரணம் அல்ல. அது அணியின்  முயற்சிக்கும் கிடைத்த வெற்றி!” என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

இதே நாளில் 2011 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றி இருந்தது. மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி வாகை சூடியது. கேப்டன் தோனி சிக்ஸர் விளாசி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். தோனியின் அந்த வின்னிங் சிக்ஸர் அதன் பிறகு பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. 

கடந்த ஆண்டு இணையதளம் ஒன்றில் ‘இந்தியா கோப்பையை கைப்பற்ற காரணமான சிக்ஸர்’ என ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அதனை அப்போதே கம்பீர் ட்வீட் மூலம் விமர்சித்திருந்தார். தற்போது அது தொடர்பாக அவரிடம் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை நேர்காணல் ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. 

“தனி ஒருவர் தான் நமக்கு உலக கோப்பையை வென்று கொடுத்தார் என எண்ணுகிறீர்களா? அப்படி ஒரே ஒரு தனி நபரால் அது சாத்தியம் என்றால் இந்தியா அனைத்து உலக கோப்பையையும் இதுவரை வென்றிருக்க வேண்டும் அல்லவா? இந்தியாவில் ஒரே ஒருவரை மட்டும் கொண்டாடுவது வாடிக்கையாகி போனது துரதிர்ஷ்டவசம். எனக்கு அதில் துளி அளவு கூட நம்பிக்கை இல்லை. குழு விளையாட்டில் தனி ஒரு நபருக்கு இடமே இல்லை. இங்கு பங்களிப்பு தான் அவசியம்.

ஜாகிர் கானின் அற்புதமான பந்து வீச்சை மறந்து விட முடியுமா? இறுதி போட்டியின் முதல் ஸ்பெல்லில் மூன்று மெய்டன் ஓவர்களை அவர் வீசியிருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக யுவராஜின் ஆட்டத்தை புறந்தள்ளி விட முடியுமா? தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சச்சினின் சதம்? ஆனால் நாம் பேசிக் கொண்டிருப்பது அந்த ஒரு சிக்ஸ் குறித்து தான். 

சிக்ஸ் அடித்தால் உலக கோப்பை என்றால் யுவராஜ் எல்லாம் ஆறு உலக கோப்பை வென்று கொடுத்திருப்பார். 2007 டி20 உலக கோப்பையில் அவர் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்தவர். 2011 உலக கோப்பையில் தொடர் நாயகனும் அவர் தான். ஆனால் இன்னும் நாம் இத்தனை ஆண்டாக சிக்ஸ் குறித்து மட்டும் தான் பேசுகிறோம்” என கம்பீர் தெரிவித்துள்ளார். 

2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்து இருந்தது. பின்னர் 275 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் சேவாக் டக் ஆக, சச்சின் டெண்டுல்கரும் 18 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். பின்னர் கவுதம் கம்பீர் ஆட்டத்தை கையிலெடுத்தார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்த விராட் கோலி 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த தோனி, காம்பியுடன் கைகோர்த்தார். இந்த ஜோடிதான் கிட்டத்தட்ட இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தது. காம்பிர் 97 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் அதிரடியாக தோனி விளையாட, யுவராஜ் சிங்கும் அவருக்கு ஒத்துழைப்பு அளித்தார். 48.2 ஓவர்களில் சிக்ஸர் விளாசி இந்தியாவின் வெற்றியை பதிவு செய்தார் தோனி. அவர் 79 பந்துகளில் 91 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.