விளையாட்டு

2016-இல் இதே நாள்... கண்ணிமைக்கும் நேரத்தில் வங்கதேசத்தினரின் நம்பிக்கையை தகர்த்த தோனி

2016-இல் இதே நாள்... கண்ணிமைக்கும் நேரத்தில் வங்கதேசத்தினரின் நம்பிக்கையை தகர்த்த தோனி

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி களத்தில் பேட்டிங் என வந்தாலும் சரி, விக்கெட் கீப்பிங் என வந்தாலும் சரி அணியின் வெற்றிக்காக ‘சூப்பர் மேன்’ போல செயல்படுபவர். அவரது அந்த செயல்பாடு அணிக்கு பலமுறை வெற்றி தேடி கொடுத்துள்ளது. அதற்கு உதாரணமாக எத்தனையோ போட்டிகளை சொல்லிக் கொண்டே போகலாம். 

இருந்தாலும் இதே நாளில் (மார்ச் 23) கடந்த 2016-இல் வங்கதேச அணிக்கு எதிரான அவரது அசாத்தியமான செயல்பாடு கடைசி பந்தில் இந்தியாவுக்கு வெற்றி தேடிக் கொடுத்தது. அதுவும் டி20 உலகக் கோப்பை தொடரில் அந்த சம்பவத்தை செய்திருந்தார் தோனி. 

கடைசி பந்தில் வெற்றி என்றதும் தோனி அவரது பாணியில் சிக்சர் விளாசி வெற்றி தேடி கொடுத்திருப்பார் என பலரும் எண்ணலாம். ஆனால் அந்த வெற்றி அவரது சிறப்பான விக்கெட் கீப்பிங் பணியினால் கிடைத்த வெற்றியாகும். 

பெங்களூருவில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் தொடங்கி இரண்டாவது இன்னிங்ஸின் 19-வது ஓவர் வரையில் இந்தியாவுக்கு சாதகமாக எதுவுமே நடக்கவில்லை. அப்போது கடைசி ஓவரை வீசும் வாய்ப்பை ஹர்திக் பாண்ட்யாவுக்கு கொடுத்திருப்பார் கேப்டன் தோனி. 

அந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் 9 ரன்களை லீக் செய்திருப்பார் பாண்ட்யா. 1,4,4 என ரன்கள் கொடுத்திருப்பார். அதனால் கடைசி மூன்று பந்தில் வங்கதேச அணியின் வெற்றிக்கு வேண்டியது 2 ரன்கள் மட்டுமே. நான்கு மற்றும் ஐந்தாவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை பாண்ட்யா சாய்த்திருப்பார். கடைசி பந்தில் என்ன செய்யலாம் என தோனி, கோலி, யுவராஜ் சிங் மற்றும் நெஹ்ரா ஆகியோர் கூடி பேசுவார்கள். பாண்ட்யா கடைசி பந்தை வீசுவதற்கு முன்னதாக தோனி தனது வலது கையின் விக்கெட் கீப்பிங் கிளவுஸை கழட்டிவிட்டு தனது கீப்பிங் பணியை கவனிப்பார். 

ஒரு ரன் எடுத்தால் ஆட்டம் டிரா. அதோடு சேர்த்து கூடுதலாக ஒரு ரன் சேர்த்தால் வங்கதேசத்திற்கு வெற்றி என்ற நிலை. அந்த கடைசி பந்தை அவுட் சைட் ஆஃப் திசையில் வீசியிருப்பார் பாண்ட்யா. ஸ்ட்ரைக்கிலிருந்த Shuvagata Hom பந்தை மிஸ் செய்ய, அது நேராக தோனியின் கையில் தஞ்சமடைந்திருக்கும். மறுமுனையிலிருந்து ஸ்ட்ரைக்கர் எண்டின் கிரீஸை கடக்க முஸ்தாபிசூர் ரஹ்மான் ஓட்டம் எடுத்திருப்பார். அதே நேரத்தில் தோனியும் அந்த ஸ்டம்பை தகர்க்கும் நோக்கில் ஓட்டம் எடுத்து அதை தகர்த்திருப்பார். அதன் மூலம் கண்ணிமைக்கும் நேரத்தில் வங்கதேசத்தினரின் நம்பிக்கையையும் தகர்த்திருப்பார். அந்த போட்டியில் இந்தியா ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றிருக்கும்.