விளையாட்டு

ஐபிஎல் அணிகள் 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் - பிசிசிஐ முடிவு

jagadeesh

அடுத்தாண்டு நடைபெற இருக்கும் மெகா ஐபிஎல் ஏலத்தில் ஏற்கெனவே இருக்கும் அணிகள் 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என்ற முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது.

14 ஆவது ஐபிஎல் டி20 போட்டிகள் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை 4 ஆவது முறையாக வென்றது. இதனையடுத்து 15 ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகளுக்கு பிசிசிஐ இப்போதே ஆயத்தமாகி வருகிறது. அடுத்தாண்டு ஐபிஎல்லில் மேலும் இரண்டு புதிய அணிகளாக அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் நுழைகின்றன. இதனையடுத்து மொத்தம் 10 அணிகள் அடுத்தாண்டு தொடரில் களம் காண்கின்றன. இதனை காரணமாக வரும் டிசம்பர் மாதம் மெகா ஏலம் நடத்தப்பட இருக்கிறது.

அதற்கு முன்பாக ஒவ்வொரு அணிகளும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம், ஏலத்தில் எவ்வளவு தொகை செலவிடலாம், வீரர்களை விடுவிப்தற்கான முறை உள்ளிட்டவற்றை பிசிசிஐ, ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழுவும் அணி நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து தயாரித்து வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் அணிகள் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற விவரங்களை பிசிசிஐ வட்டாரங்கள் மூலம் வெளியாகி இருக்கிறது. அதன்படி 8 அணிகளும் தலா 4 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த 4 வீரர்களில் 3 பேர் இந்தியர், ஒருவர் வெளிநாட்டவர் அல்லது 2 இந்தியர், 2 வெளிநாட்டவர் என்ற அடிப்படையில் இருக்கும். மேலும் லக்னோ, அகமதாபாத் அணிகள் ஏலப்பட்டியலில் இடம் பெறும் வீரர்களில் இருந்து 3 வீரர்களை ஏலத்திற்கு முன்பாகவே எடுத்துக் கொள்ளலாம் என்ற சலுகையும் வழங்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு அணியும் ஏலத்தில் வீரர்களை வாங்க முன்பு ரூ.85 கோடி செலவிட்டன. அது ரூ.90 கோடியாக உயர்த்தப்படும் என்றும் கூறப்படுகிறது. வீரர்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு நவம்பர் மாதம் வரை இருக்கும் என்று தெரிகிறது.