விளையாட்டு

2வது ஒரு நாள் போட்டி: நியூசி. அணிக்கு 325 ரன் இலக்கு!

webteam

நியூசிலாந்துக்கு எதிரான 2 வது ஒரு நாள் போட்டியில் அந்த அணிக்கு, 325 ரன் இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இப்போது, ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. நேப்பியரில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி, அபார வெற்றி பெற் றது. இரண்டாவது போட்டி மவுன்ட் மாங்கனுயி-ல் இன்று நடக்கிறது. 

இந்திய அணியில் மாற்றமில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அணியே, இந்தப் போட்டியிலும் களமிறங்கியது. நியூசிலாந்து அணியில், சுழற்பந்துவீச்சாளர் சன்ட்னர், வேகப்பந்துவீச்சாளர் சவுதி நீக்கப்பட்டு, சோதி, கிராண்ஹோம் திரும்பியுள்ளனர். 

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும் தவானும் களமிறங்கினர். இவரும் அடித்து ஆடினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 154 ரன் சேர்த்தது. தவான், 66 ரன் எடுத்த நிலையில் போல்ட் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் லாதமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் விராத் கோலி, ரோகித்துடன் இணைந்தார். 

அணியின் ஸ்கோர் 172 ஆக இருந்தபோது, ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 87 ரன் எடுத்தார். அடுத்து ராயுடு வந்தார். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் இருவரும் அடித்து ஆடினர். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த விராத், 45 பந்தில் 43 ரன் எடுத்த நிலையில் போல்ட் பந்துவீச்சில் சோதியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 236 ஆக இருந்தது. அடுத்து ராயுடுவுடன் தோனி களமிறங்கினார். 

இருவரும் அடித்து ஆடினர். 49 பந்தில் 47 ரன் எடுத்திருந்த ராயுடு, 46 வது ஓவரில் பெர்குசன் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 271 ரன் எடுத்திருந்தது. 

பின்னர் தோனியுடன் இணைந்தார் கேதர் ஜாதவ். இவரும் இணைந்து வேகமாக ரன்களை குவித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 324 ரன் எடுத்தது. தோனி, 33 பந்துகளில் ஒரு சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 48 ரன்களும், கேதர் ஜாதாவ் 10 பந்துகளில் ஒரு சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 22 ரன்னும் எடுத்தனர்.

நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் போல்ட், பெர்குசான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் 325 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி, தனது ஆட்டத்தை  தொடங்கியுள்ளது.