Nuwan thushara Files complaint  web
விளையாட்டு

’இலங்கையை விட IPL-தான் முக்கியம்..’ நீதிமன்றம் சென்ற நட்சத்திர வீரர்! பரபரப்பு வழக்கு!

தேசிய அணியில் ஆடுவதை விட ஐபிஎல் தொடரில் ஆடுவதே தனக்கு முக்கியம் என நட்சத்திர வீரர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Praveen Joshva L

ஒரு காலத்தில் ஒரு கிரிக்கெட் வீரரின் உட்சபட்ச கனவாக தனது தேசிய அணியில் இடம்பெறுவதாகவே இருந்தது. ஆனால் 2008-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஐபிஎல் தொடர் கிரிக்கெட் வரலாற்றில் பெரும் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

2026 ஐபிஎல் அப்டேட்

ஐபிஎல் தொடரின் வெற்றி, அதில் கிடைக்கும் புகழ் மற்றும் வருவாய் காரணமாக பல்வேறு நாடுகளை சார்ந்த வீரர்களும் தங்கள் தேசிய அணியில் ஆடுவதை விட ஐபிஎல் தொடரில் ஆடுவதையே முக்கியமானதாக கருதுகின்றனர். ஐபிஎல் தொடரின் வெற்றிக்கு பின்னர் பல்வேறு நாடுகளும் அதே பாணியிலான தனியார் லீக் தொடரை ஆரம்பித்தாலும், ஐபிஎல் தொடரின் அருகில் கூட எந்த தொடராலும் வர முடியவில்லை.

கடந்த ஆண்டு இலங்கை அணியின் நட்சத்திர வீரர் நுவான் துஷாராவை பெங்களூரு அணி ரூ.1.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது. மலிங்கா பாணியில் பந்துவீசும் இவர், கடைசி ஓவர்களில் யார்க்கர் பந்துகளை வீசுவதில் வல்லவராக கருதப்படுகிறார். கடந்த ஆண்டு 1 போட்டிகளில் மட்டுமே இவர் விளையாடினாலும் பெங்களூரு அணி இந்த ஆண்டும் இவரை தக்கவைத்துள்ளது.

நுவான் துஷாரா

இதனிடையே நுவான் துஷாராவுக்கு, இந்த ஆண்டு IPL தொடரில் பங்கேற்பதற்குத் தேவையான தடையில்லா சான்றிதழை இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்னும் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த சான்றிதழை உடனடியாக வழங்க உத்தரவிடவேண்டும் என அவர் இலங்கை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும், தனது ஒப்பந்தம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்ததாகவும், அந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகிக்கொள்ள விரும்புவதாக அணி நிர்வாகத்திடம் கூறியதாகவும், இதன் காரணமாகவே இலங்கை அணி நிர்வாகம் தனக்கு தடையில்லா சான்றிதழை வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த தடையில்லா சான்றிதழ் கிடைக்காத பட்சத்தில், தனக்குக் கணிசமான அளவில் நிதி இழப்பும், கிரிக்கெட் வாய்ப்புகளுக்கான இழப்பும் ஏற்படும் என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கிந்திய அணி வீரர்கள் பாணியில் இலங்கை வீரர் ஒருவரும் தேசிய அணியை விட ஐபிஎல் தொடரில் ஆடுவதே முக்கியம் என நீதிமன்றம் வரை சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.