விளையாட்டு

இனி 11 இந்திய மொழிகளில் ஐபிஎல்லை இலவசமாகப் பார்க்கலாம்.. அதிரடியில் இறங்கிய ஜியோ!

PT

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் உரிமையை வியாகாம் 18 தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியிருப்பதால், ஐபிஎல் போட்டிகளை ரசிகர்கள் இலவசமாகப் பார்க்கலாம் என அது தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் திருவிழா இப்போதே களைகட்டத் தொடங்கிவிட்டது. அதற்கான அணி வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டு உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். இதனால் இந்த ஆண்டும் ஐபிஎல் திருவிழாவில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று சொல்லலாம். இந்த நிலையில், 2023ஆம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் உரிமையை வியாகாம் 18 தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

கடந்த ஐபிஎல் தொடரின் உரிமை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடமும், டிஜிட்டல் உரிமை ஹாட்ஸ்டார் நிறுவனத்திடமும் இருந்தன. இதனால் ரசிகர்கள் பணம் கட்டி பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்கு வியாகாம் 18 நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 2023ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் டிஜிட்டல் உரிமையை ரிலையன்ஸ் நிறுவனத்தின் வியாகாம் 18 நிறுவனம் கைப்பற்றி உள்ளது. ரூ. 20,500 கோடி கொடுத்து இந்த உரிமையை ஹாட்ஸ்டாரிடம் இருந்து வியாகாம் 18 நிறுவனம் பெற்றுள்ளது.

இதன்மூலம், ஜியோ செயலி மூலம் இனி இலவசமாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஐபிஎல் போட்டியை நேரலையாக ரசிகர்கள் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஐபிஎல் தொடர் 11 மொழிகளில் வர்ணனை செய்யப்பட இருக்கிறது. தமிழ், போஜ்புரி உள்ளிட்ட 11 மொழிகளில் வர்ணனை செய்யப்பட இருக்கிறது. ஜியோ நிறுவனம் தன்னுடைய செயலியை பிரபலப்படுத்தும் நோக்கில், அதாவது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இந்த ஐபிஎல் தொடரை, இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது.

அதன்படி இந்தாண்டு ஐபிஎல் தொடரின் மூலம் 50 கோடி வாடிக்கையாளர்களை ஜியோ டிவி செயலிக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காகத்தான் ஐபிஎல் இலவசம் என்ற திட்டத்தை அறிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

- ஜெ.பிரகாஷ்