விளையாட்டு

நாட்-அவுட்டில் ஹாட்ரிக்: இலங்கை பந்துவீச்சாளர்களை சோதித்த தோனி

நாட்-அவுட்டில் ஹாட்ரிக்: இலங்கை பந்துவீச்சாளர்களை சோதித்த தோனி

rajakannan

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றிய இந்திய அணி இன்று 4-வது போட்டியில் விளையாடி வருகிறது.

4 போட்டிகளில் இந்திய அணி பேட்டிங் செய்துள்ள நிலையில், இலங்கை பந்துவீச்சாளர்களை முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சோதித்து வருகிறார். ஒரு போட்டியில் கூட அவரை இலங்கை வீரர்களால் ஆட்டமிழக்க செய்ய முடியவில்லை.

முதல் போட்டியில் இலங்கை அணி நிர்ணயித்த 216 ரன்களை இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோனி விளையாடவில்லை. இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றியை தீர்மானித்ததில் தோனியின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. 231 ரன்கள் என்ற வெற்றி இலக்கை தூரத்திய இந்திய அணி 131 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் இந்திய அணியின் வெற்றி கேள்வி குறியானது.

பின்னர் தோனியும், புவனேஷ்குமாரும் இணைந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றி பெறச் செய்தனர். புவனேஷ்குமார் அரைசதம் அடித்தாலும், தோனி அவருக்கு உறுதுணையாக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதேபோல், மூன்றாவது போட்டியிலும் தோனி இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் 67 ரன்கள் சேர்த்தார். 2-வது ஒருநாள் போட்டியில் புவனேஷ்குமாருடன் இணைந்து விளையாடியது போல் இந்த போட்டியில் ரோகித் சர்மாவுக்கு ஒத்துழைப்பு அளித்தார்.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இணையிலான 4-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 375 ரன்கள் குவித்தது. கோலி, ரோகித்தின் அதிரடி சதத்தால் இந்திய அணி 400 ரன்களுக்கு மேல் எடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 350 ரன்கள் எட்டுமா என்ற கேள்விக் குறி ஏற்பட்டது.

பின்னர் 7-வது விக்கெட்டுக்கு மணிஷ் பாண்டேவும், தோனியும் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களின் ஆட்டத்தால் இந்திய அணி 350 ரன்களை கடந்தது. இந்த போட்டியிலும் தோனி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் தோனி தொடர்ந்து மூன்று போட்டிகளில் நாட்-அவுட் ஆகி உள்ளார். இரண்டு போட்டிகளில் இலங்கை அணியின் வெற்றி வாய்ப்பை தோனி சிதைத்து விட்டார். தோனி இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெறுவது குறித்து கேள்விகள் எழுந்த நிலையில் தனது பேட்டால் அவர் பதில் அளித்துள்ளார்.