’100 பந்துகள்’ தொடருக்கான ஏலத்தில், ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானுக்கு கடும்போட்டி நிலவியது. கிறிஸ் கெய்ல், மலிங்காவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
’100 பந்துகள்’ கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடக்க இருக்கிறது. இதற்காக இங்கிலாந்து நகரங்களின் பெயர்களில் 8 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான ஏலத்துக்கு, இங்கிலாந்தில் இருந்து 331 வீரர்கள், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கையை சேர்ந்த 239 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இந்திய வீரர்கள் பதிவு செய்யவில்லை.
இந்நிலையில், இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் லண்டனில் நடந்தது. இதில் ஆப்கான் வீரர் ரஷித் கானை வாங்குவதற்கு கடும் போட்டி நிலவியது. இறுதியில் டிரென்ட் ராக்கெட்ஸ் அணி அவரை ஏலம் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸின் ரஸல், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச், ஆப்கானின் முஜீப்புர் ரஹ்மான், வெஸ்ட் இண்டீசின் சுனில் நரைன், தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர், ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் ஆகியோர் முதல் சுற்றிலேயே ஏலம் எடுக்கப்பட்டனர்.
ஆனால், அதிரடி வீரர் கிறிஸ் கெய்லை யாரும் ஏலம் எடுக்கவில்லை. தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா, ’யார்க்கர் கிங்’ மலிங்கா ஆகியோரையும் யாரும் ஏலம் எடுக்கவில்லை.