விளையாட்டு

அறுவை சிகிச்சை இல்லை, விரைவில் வருகிறார் பும்ரா: பயிற்சியாளர் தகவல்

அறுவை சிகிச்சை இல்லை, விரைவில் வருகிறார் பும்ரா: பயிற்சியாளர் தகவல்

webteam

வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு, முதுகில் ஏற்பட்டுள்ள காயத்துக்காக அறுவைச் சிகிச்சை தேவையில்லை என தெரியவந்துள்ளது.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. இவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டதால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார்.

இது தொடர்பாக, பிசிசிஐ வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில், “ஜஸ்பிரித் பும்ராவிற்கு முதுகில் சிறிய அளவு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் அவர் பங்கேற்க மாட்டார். காயம் குணமடையும் வரை கண்காணிப்பில் இருப்பார். அத்துடன் பிசிசிஐயின் மருத்துவக் குழு அவரது காயத்தை கண்காணிக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக இங்கிலாந்து சென்றார். அவருடன் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பிசியோ தெரபிஸ்ட் ஆஷிஷ் கவுசிக்கும் சென்றிருந்தார். அங்கு சிறப்பு மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசனை பெற்றனர். அதனடிப்படையில் அவருக்கு இப்போது அறுவைச் சிகிச்சைத் தேவையில்லை என்று தெரிய வந்துள்ளது.

இதுபற்றி இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறும்போது, ‘வேகப்பந்து வீச்சில் எங்களின் சிறந்த கண்காணிப்பு இருந்தபோதும் காயம் ஏற்படாமல் இருக்க, எந்த உத்தரவாதமும் தர முடியாது. அவர் விரைவில் குணமாகி விடுவார். அறுவைச் சிகிச்சை தேவையில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் மூன்று மாதம் வரை அவர் ஓய்வில் இருப்பார். நியூசிலாந்துக்கு எதிராக நடக்கும் தொடரில் அவர் பங்கேற்பார் என்று நம்புகிறோம்’’ என்று தெரிவித்தார்.