விளையாட்டு

உலகின் தலைசிறந்த கிரிக்கெட் அணியில் சச்சினுக்கு இடங்கொடுக்காத அப்ரிதி !

உலகின் தலைசிறந்த கிரிக்கெட் அணியில் சச்சினுக்கு இடங்கொடுக்காத அப்ரிதி !

jagadeesh

எல்லா காலகட்டங்களிலும் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் கொண்ட லெவனில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பெயரைப் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிதி சேர்க்கவில்லை.

ஊரடங்கு காலகட்டத்தில் பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் தங்களுக்குப் பிடித்த வீரர்களைக் கொண்டு 11 பேர் கொண்ட அணியை அறிவித்து வருகின்றனர். அப்படிதான் அப்ரிதியும் தனக்குப் பிடித்த அணியை அறிவித்துள்ளார். அதில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பெயரும், பாகிஸ்தானுக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்த இம்ரான் கானின் பெயரையும் அவர் சேர்க்கவில்லை. மேலும் இந்தியத் தரப்பில் விராட் கோலியின் பெயரை மட்டும் லெவனில் சேர்த்துள்ளார்.

பாகிஸ்தான் அணி கடந்த 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. அப்போது இம்ரான் கான் அந்த அணிக்கு கேப்டனாக இருந்தார். இப்போது அந்நாட்டின் பிரதமராக இருக்கிறார். இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் ஆறு உலகக் கோப்பையில் விளையாடியுள்ளார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையை இந்தியா வென்றது. அந்த அணியில் சச்சின் இடம் பிடித்திருந்தார்.

மேலும் தனது அணியில் சயீத் அன்வர் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோருக்கு தொடக்க பேட்ஸ்மேன் இடத்தை வழங்கியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்காக இரண்டு முறை உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்த ரிக்கி பாண்டிங்கை 3-வது இடத்திற்குத் தேர்வு செய்துள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் இன்சமாம் உல் ஹக் ஆகியோரை அடுத்த இரண்டு இடத்திற்குத் தேர்வு செய்துள்ளார்.

மேலும் தென்னாப்பிரிக்காவின் ஜேக்யூஸ் காலீஸை ஆல்-ரவுண்டராக தேர்வு செய்துள்ளார். பந்துவீச்சாளர்களில் பெரும்பாலும் பாகிஸ்தானின் பவுலர்களையே தன்னுடைய அணியில் இடம்பெறச் செய்துள்ளார். அதில் வாசிம் அக்ரம், சோயிப் அக்தர் ஆகியோரை வேகப்பந்து வீச்சாளராகத் தேர்வு செய்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவின் மெக்ராத்தும் இடம் பிடித்திருக்கிறார். சுழற்பந்துவீச்சாளர்களில் ஷேன் வார்னே மற்றும் சக்லைன் முஷ்டாக் ஆகியோரை இடம் பெறச் செய்துள்ளார்.

ஷாகித் அப்ரிதி தேர்வு செய்துள்ள அணி ஜீரணிக்க முடியாத அளவில் இருக்கிறது என்றும் அவர் சச்சின் மீதான வன்மத்தைக் காட்டுவதாகவே இருப்பதாகவும் உலக கிரிக்கெட் ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.