விளையாட்டு

‘சந்தேகமே வேண்டாம், 2021 சீசனிலும் சிஎஸ்கேவுக்காக தோனி விளையாடுவார்’ - என்.சீனிவாசன்

‘சந்தேகமே வேண்டாம், 2021 சீசனிலும் சிஎஸ்கேவுக்காக தோனி விளையாடுவார்’ - என்.சீனிவாசன்

rajakannan

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி விளையாடுவார் என்று அதன் உரிமையாளரும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான என்.சீனிவாசன் கூறியுள்ளார்.

பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்ட வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலில் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. ஓய்வை இன்னும் அறிவிக்காத நிலையில், தோனியின் பெயர் இடம்பெறாதது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், தோனி கூலாக ராஞ்சியில் பயிற்சியில் ஈடுபட்டார். தோனியின் ஓய்வு குறித்து மீண்டும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்திய அணியில் விளையாடினாலும், விளையாடா விட்டாலும் சிஎஸ்கே அணிக்காக 2021 தொடரிலும் தோனி விளையாடுவார் என்று அதன் உரிமையாளர் என்.சீனிவாசன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறிய போது, “தோனி அடுத்ததாக எப்போது விளையாடுவார்? இன்னும் எவ்வளவு காலம் விளையாடுவார் என்று எல்லோரும் கேட்கிறார்கள். அவர் நிச்சயம் விளையாடுவார் என்பதை மட்டும் நான் உறுதியாக கூறுகிறேன். அடுத்த ஆண்டும் அவர் விளையாடுவார். அடுத்த ஆண்டும் அவர் ஏலத்தில் பங்கேற்பார். அவர் தக்க வைக்கப்படுவார். அதனால், யாருக்கும் சந்தேகம் வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

2008 ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடி வருகிறார். இடையில் அந்த அணிக்கு தடைவிதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் மட்டும் அவர் புனே அணிக்காக விளையாடினார். சென்னை அணிக்கு அவர் கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு வருகிறார்.