’எப்போதும் ராகுல் டிராவிட்டையே பின்பற்றுகிறேன், அவர் என் ரோல் மாடல்’ என்று ரஹானே தெரிவித்தார்.
இந்திய ஒரு நாள் அணியில், நான்காவது வரிசை வீரர் பற்றி கடுமையாகப் பேசப்பட்டு வந்த நிலையில், சத்தமில்லாமல் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிவிட்டு வந்திருக்கிறார் ரஹானே. உலகக் கோப்பைத் தொடரில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட ரஹானே, அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொல்கத்தாவில் நடந்த பெங்கால் கிரிக்கெட் சங்க விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார் ரஹானே. அப்போது, மேடையில் பேசும்போது, ‘’இந்த விழாவில் 4-வது ஆளாக என்னை மேடைக்கு அழைத்திருக்கிறார்கள். எனக்குப் பிடித்த இடமாக 4 இருக்கிறது’ என்று கிண்டலாகத் தொடங்கினார்.
பின்னர் அவர் கூறும்போது, ‘’மும்பையில் கடும் மழை பெய்துவருவதால், பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி யில் பயிற்சி பெற்று வருகிறேன். அங்கு ராகுல் டிராவிட் இருக்கிறார். நான் எப்போதும் அவரையே பின்பற்றுகிறேன். அவர் எனது ரோல் மாடல்களில் ஒருவர். அடுத்து வெஸ்ட் இண்டீஸ் தொடரை எதிர்பார்த்து இருக்கிறேன். அவர்கள் அபாயகரமான வர்கள். அதோடு கணிக்க முடியாத அணியாகவும் வெஸ்ட் இண்டீஸ் இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் எனக்குப் பிடித்த ஒன்று. டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை, நீங்கள் விரைவாக ஆட்டமிழந்துவிட்டாலும் அல்லது நூறு ரன்கள் எடுத்தாலும் ஆட்டத்தை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்’’ என்றார்.