விளையாட்டு

2019 உலகக்கோப்பை: ஊசலாடும் உனாட்கட்!

webteam

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற ஜெயதேவ் உனாட்கட் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான உனாட்கட், டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். அண்மையில் தென்னாப்பிரிக்காவுடன் நடைபெற்று டி20 தொடரில் 2 போட்டிகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் அவருக்கு இந்தியா-இலங்கை-வங்கதேசம் மோதும் முத்தரப்பு டி20 போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. இருப்பினும் புவனேஷ்வர் மற்றும் பும்ரா போன்ற வீரர்களில் ஏதேனும் ஒருவர் ஓய்வு பெரும் போதே இவர் அணியில் சேர்க்கப்படுகிறார். 

இந்நிலையில் இந்தியா-இலங்கை-வங்கதேசம் மோதும் டி20 தொடரில் உனாட்கட் சிறப்பாக விளையாடினால் அவரை அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக்கோப்பை அணிக்கு தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதனால் வரும் டி20 தொடரை பொறுத்து உனாட்கட்டின் உலகக் கோப்பை வாய்ப்பு ஊசலாடிக்கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக பேசிய உனாட்கட், “இந்த முத்தரப்பு டி20 போட்டி எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். இதில் கண்டிப்பாக நான் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். டி20ல் மட்டுமல்ல இனி 50 ஓவர்களிலும் நான் சிறந்த ஆட்டத்தையே வெளிப்படுத்த முயல்வேன். கடந்த 2 தொடரில் விளையாடியது எனக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கண்டிப்பாக நான் உலக அளவிலான போட்டிகளில் சாதிப்பேன்” என்று கூறினார்.