விளையாட்டு

விக்கெட் இழப்பே இல்லை: இலங்கையை வீழ்த்திய நியூசிலாந்து!

விக்கெட் இழப்பே இல்லை: இலங்கையை வீழ்த்திய நியூசிலாந்து!

webteam

10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.

இங்கிலாந்தின் கார்டிப் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, நியூசிலாந்து வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. குஷால் மெண்டீஸ், ஆஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர். 

திரிமண்ணே மற்றும் டி சில்வா தலா 4 ரன்களிலும், ஜீவன் மெண்டீஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சற்று அதிரடி காட்டிய திசாரா பெரைரா 23 பந்துகளில் 2 சிக்சர்களுடன் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்க வீரராக களம் கண்ட கேப்டன் கருரத்ணே மட்டும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் சேர்த்தார். இலங்கை அணி 29.2 ஓவர்களில் 136 ரன்கள் மட்டுமே சேர்த்தே ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து சார்பில் மேத் ஹென்றி மற்றும் ஃபெர்குசன் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

எளிதான இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து ஆரம்பம் முதலே சீரான வேகத்தில் ரன் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர்களான மார்ட்டின் குப்தில் மற்றும் கோலின் முன்ரோவும் விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் விளையாடினர். மார்ட்டின் குப்தில் 73 ரன்களும், கோலின் முன்ரோ 58 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர்.

இறுதியாக 16.1 ஓவரில் வெற்றி இலக்கான 137 ரன்களை எடுத்து நியூசிலாந்து வெற்றி பெற்றது.  ஒரு விக்கெட் கூட இழக்கப்படாத நிலையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தன்வசப்படுத்தியது நியூசிலாந்து .