விளையாட்டு

சிட்னியில் சட்னியான இலங்கை... நியூசிலாந்து அசத்தல் வெற்றி!

JustinDurai

ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றில் இன்று நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதின. இந்த வெற்றியின் மூலம் 5 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி அரை இறுதிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றில் இன்று நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதின. சிட்னியில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி பேட்டிங் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய க்ளென் பிலிப்ஸ் அபாரமாக ஆடி சதம் விளாசினார். அவர் 64 பந்துகளில் 10  பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 104 ரன்கள் குவித்தார். இலங்கை அணி தரப்பில் கசுன் ரஷிதா 2 விக்கெட்டும், தீக்‌ஷனா, டி சில்வா, ஹசரங்கா, லஹிரு குமாரா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை பேட்ஸ்மேன்கள், நியூசிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். அந்த அணியில் பானுகா ராஜபக்ச (34 ரன்கள்), தசுன் ஷனக (35 ரன்கள்) தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்து நடையை கட்டினர். இறுதியில் இலங்கை அணி 19.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபாரமாக வெற்றிகண்டது. நியூசிலாந்து தரப்பில் டிரெண்ட் பவுல்ட் 4 விக்கெட்டும், சாண்ட்னெர், இஷ் சோதி தலா 2 விக்கெட்டும், சவுதி, பெர்குசன் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 5 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி அரை இறுதிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. 2 புள்ளிகள் மட்டுமே பெற்று உள்ள இலங்கை அணியின் அரை இறுதி வாய்ப்பு கடினமாகி உள்ளது.

இதையும் படிக்கலாமே: “இனி ரியல் மிஸ்டர் பீனை அனுப்புங்கள்”.. ஜிம்பாப்வே - பாக். அதிபர்களிடையே வார்த்தை யுத்தம்