விளையாட்டு

2வது டி20: நியூஸியை வீழ்த்தி பழி தீர்த்தது பாகிஸ்தான்!

2வது டி20: நியூஸியை வீழ்த்தி பழி தீர்த்தது பாகிஸ்தான்!

webteam

நியூஸிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, தற்போது 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று ஆக்லாந்தில் உள்ள ஈடென் பூங்கா மைதானத்தில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. அந்த அணியில் பகார் ஜமான் 50, பாபர் அசாம் 50, அஹமது செஷாத் 44, சர்ஃபாஸ் அகமட் 41 ரன்கள் எடுத்தனர்.

இதை தொடர்ந்து 202 என்ற கடினமான இலக்கை எதிர்த்து ஆட்டத்தை தொடங்கிய நியூஸிலாந்து அணி, தொடக்கத்திலேயே தடுமாறியது. முன்ரோ 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேற, அடுத்து வந்த கெய்ன் வில்லியம்ஸன் பூஜ்ஜியத்திலேயே அவுட் ஆனார். இதனால் அந்த அணியின் வெற்றி மங்கியது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் போக, பின்னர் வந்த மிட்செல் மற்றும் பென் ஆகியோர் 30 ரன்களை கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும் 18.3 ஓவர்களில் 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது நியூஸிலாந்து. இதனால் 48 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்று, தொடரை 1-1 என சமன் செய்தது. இதன்மூலம் மூன்றாவது டி20 போட்டியில் அனல்பறக்கும் ஆட்டம் வெளிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.