நியூசிலாந்து அணிக்கு எதிராக நாளை ஆக்லாந்தில் நடைபெறவுள்ள 2-ஆவது ஒரு நாள் போட்டியில் இரண்டு ஸ்பின் பவுலர்களை களமிறக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் யோசனை தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 347 ரன்கள் குவித்தும் 4 விக்கெட் வித்தியாத்தில் தோல்வியடைந்தது. இந்திய பவுலர்களின் பந்துவீச்சை நியூசிலாந்து வீரர்கள் சிதறடித்ததே இதற்கு காரணம். மேலும் வேகப்பந்து வீச்சாளர்களான ஷர்துல் தாக்கூர், பும்ரா, ஷமி ஆகியோரின் பந்துவீச்சை நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் துவம்சம் செய்தனர். இந்நிலையில் நாளை ஆக்லாந்தில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
இதனையடுத்து நாளையப் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்றால் ஆடும் லெவனில் சில மாற்றங்களை செய்ய வேண்டுமென்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் சில யோசனைகளை முன் வைத்துள்ளார். "இந்துஸ்தான் டைம்ஸ்" நாளிதழுக்கு பேட்டியளித்த அவர் " சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களம் இறங்க வேண்டும். இப்போதுள்ள நியூசிலாந்து அணி உலகின் எந்தவொரு வேகப்பந்து வீச்சாளரையும் எதிர்கொண்டு எளிதாக விளையாடி விடும்" என்றார்.
மேலும் தொடர்ந்த ஹர்பஜன் சிங் " ஆனால் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும்போது நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் எப்போதும் திணறுவார்கள். நியூசிலாந்து அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்திவிடுவார்கள். அதனால்தான் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களம் இறங்க வேண்டும் என்று நினைக்கிறேன். கேதர் ஜாதவை ஆடும் லெவனில் இருந்து நீக்கினால் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட முடியும்" என்று தெரிவித்துள்ளார்.