விளையாட்டு

"நடக்கக் கூடாதது நடந்துடுமோ என பயந்துட்டேன்!" - கண்ணீர்விட்ட நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்

jagadeesh

கொரோனா தொற்று உறுதியானதும் எனக்கு ஏதேனும் நடக்கக் கூடாதது நடந்துடுமோ என பயந்துவிட்டேன் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சீஃபர்ட் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கலந்துகொண்ட வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் நடப்பு ஐபிஎல் தொடரை பிசிசிஐ ரத்து செய்தது. இதனையடுத்து இதில் கலந்து கொண்டிருந்த வெளிநாட்டு வீரர்கள், வர்ணனையாளர்கள், அம்பயர்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய நியூசிலாந்து வீரர் டிம் சீஃபர்டுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து டிம் சீஃபர்ட் மற்ற வீரர்களுடன் தனது நாட்டுக்கு திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

மிதமான அறிகுறிகளைக் கொண்டிருந்த டிம் சீஃபர்டுக்கு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது.  ஏற்கெனவே கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி அனுமதிக்கப்பட்டுள்ள அதே தனியார் மருத்துவமனையில் டிம் சீஃபர்டும் அனுமதிக்கப்பட்டிருந்தார். இப்போது பூரண குணமடைந்த டிம் சீஃபர்ட் நாடு திரும்பியுள்ளார்.

தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து பேசிய டிம் சீஃபர்ட் "எனக்கு லேசான இருமல் இருந்தது. அப்போது அதை நான் ஆஸ்துமா என நினைத்தேன். பின்பு கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்தது. உடல் சோர்வும் லேசாக இருந்தது. கொரோனா பாசிட்டிவ் வந்ததும், ஒரு நிமிடம் உலகம் நின்றதுபோல உணர்ந்தேன். அடுத்து என்ன நடக்கும் என தெரியவில்லை. எனக்கு ஏதும் நடக்கக் கூடாத கெட்ட விஷயம் நடந்துவிடுமோ என மிகவும் பயந்தேன். இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை என வெளியாகும் செய்தி அச்சமூட்டியது" என சொல்லிக்கொண்ருரக்கும்போதே உடைந்து அழுதார் சீஃபர்ட்.

மேலும் பேசிய அவர் "பின்பு ஹசியும், மெக்கலமும் எனக்கு மருத்துவமனையில் ஆறுதலான வார்த்தைகளை கூறி தேற்றினர். கொரோனாவில் இருந்து மீண்டு வருவதற்கு அவர் கொடுத்த தன்னம்பிக்கை பெரிதும் உதவியாக இருந்தது. மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள் சிறப்பாக கவனித்தார்கள். ஆனால் எந்தவொரு வீரருக்கும் இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டுவிடக் கூடாது" என்றார் டிம் சீஃபர்ட்.