விளையாட்டு

தென் ஆப்ரிக்கா நிதானமான ஆட்டம் - நியூசிலாந்து அணிக்கு 242 ரன் இலக்கு

rajakannan

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்ரிக்கா 242 ரன் இலக்காக நிர்ணயித்துள்ளது. 

உலகக் கோப்பை தொடரில் பிர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் 25வது போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்ரிக்க அணிகள் விளையாடி வருகின்றன. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. மழை பெய்ததால் போட்டி சற்று நேரம் தாமதமாக தொடங்கியது. அதனால், போட்டி 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்ரிக்க அணியில் விக்கெட் கீப்பர் டி காக் 5 ரன்னில் ஏமாற்றினார். ஆம்லா நிலைத்து நின்று ஆட, கேப்டன் டு பிளிசிஸ் 23 ரன்னில் ஆட்டமிழந்தார். மார்கரம் கொஞ்ச நேரம் தாக்குபிடித்து 38 ரன் எடுத்தார். டுசன்  மட்டும் இறுதிவரை நிலைத்து நின்று ஆடினார். அவருக்கு மில்லர் சற்று நேரம் ஒத்துழைப்பு அளித்து 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இறுதியில் தென்னாப்ரிக்கா அணி 49 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்தது. டுசன் 64 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மிகவும் நிதானமாக விளையாடிய நிலையில், கடைசி 10 ஓவர்களில் தென்னாப்ரிக்க வீரர்கள் 75 ரன்கள் அடித்தனர். நியூசிலாந்து அணியில் பெர்குசன் 3 விக்கெட் சாய்த்தார்.